ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Saturday, November 11, 2006








காகிதங்களில் கவிதைகளை நிரப்பிய நான்
கவிதை சரியில்லாத காகிதத்தையும்
காகிதம் சரியில்லாத கவிதையையும்
கசக்கி எறிந்தேன்...
கசங்கிய கவிதைக் காகிதங்களை
கழுதை ஒன்று தின்று கொண்டிருக்க
காணும் தூரத்தில் நின்ற ஒருவன்
'கவித போதும் கழுத' என்றான்
கழுதையையா? என்னையா?

செருப்படியின் வலியோடு
ஆரம்பித்தது நம் காதல்
கண்ணடித்த காயங்களுக்கு
கண்களாலேயே மருந்திட்டாய்
வராத சோகத்தை வரவழைத்து
ஒரு நாள் அழுகையினூடே
விலகிவிடு என்றாய்..
அன்று நீ அடித்தது கன்னத்தில்
மட்டும்தான் வலித்தது
இன்று கனவுகளில்........

Thursday, November 09, 2006

கடைசியாய்
கண்ணில் கடல் நீர் சுரந்து
உப்புத்தண்ணீர் நிறைந்த
உன் உதட்டு முத்தம்
இரத்தம் வற்றிய தேகத்தின்
ஏதோ ஒரு மூலையில்
இன்றும் இனிமையாய்.......

உனக்கான கவிதைகளை எழுதும்போது
என் பேனா முனை உடைந்து போகும்
அப்போதெல்லாம் உன் அழகின் கனம் தாங்காது
உடைகிறதென்று நினைத்துக் கொள்வேன்
இப்போதுதான் புரிகிறது
அது என் மரணத்திற்கான
விதம் விதமான தீர்ப்புகள் என்பது......

Tuesday, November 07, 2006

பெரும்பாலும்
வாழ்க்கைப் பாதையின்
வழிப்பயணத்தை மாற்றி அமைக்கிறது
வழக்கமான பாதையில்
பயணப்படும் பேருந்து
இன்று கல்லூரி முதல் நாள்...

"அடடே..! யார் முதலில் நிறுத்துவது...?"

" நிரம்பி வழியும் பேருந்து நிலையம்
நிற்க இடமில்லா ரயில் பயணம்
நெரிசலில் நசுங்கும் காய்கறி பேரம்...
எங்குமாய் எதிலுமாய்
மனிதர்கள்...மனிதர்கள்....
எப்படியும் ஒரு ஆண்பிள்ளை வேண்டும் என்று
இயன்றவரை முயன்று பார்க்கும் முட்டாள்கள்
இரண்டு இலக்கம் பெற்றுவிட்ட களைப்பில்
இறைவன் செயல் என்று
இறைவனிடமே பொறுப்பை ஒப்படைத்து
இறைவனடி சேரும் பிணங்கள்
ஏதோ ஒரு மோகத்தில் இரண்டை பெற்று
அவன் ஒன்றும் அவள் ஒன்றுமாய் வைத்திருக்கும்
அன்பில்லா தம்பதிகள்
மறைவிடங்கள் தேடி செய்த தவறு வளர
குப்பைத் தொட்டியில் தூங்க விட்டுவிட்டு
தூக்கமில்லாது தூரப்பார்வை பார்க்கும் துர்ப்பாக்கியசாலிகள்
பொதுவாகவே,
இவர்களைனைவரும்
உற்பத்திப் பெருக்கத்திற்காக
உறக்கமின்றித் திரிந்தவர்கள்
உடல் அசைவுகளின் ஆசையை
நிந்தனை செய்வதற்கே சிந்தனை செய்தவர்கள்
உங்கள் உணர்வுகளை கட்டுப் படுத்தி
உலக மக்கள் தொகையையும் கட்டுப்படுத்துங்கள் "
என்று அவன் எழுதிக்கொண்டிருக்க
கடனுக்கு வாங்கிய காபியோடு
கையில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுமாய்
அவன் துணை வர
முதல் இரண்டும் முடியைப் பிடித்து
விளையாடிக்கொண்டிருந்தது...
அவன் "ஹே! ... யாரது..? என் வீட்டை எட்டிப்பார்ப்பது?
என்று என்னைப் பார்த்து கத்துகிறான்....!

குப்பைத்தொட்டியின் நடுவில்
மின்சார கம்பத்தில்
சுவரொட்டியிலான சுவரில்
குடிநீருக்கான கனத்த குழாய்களில்
என ஆரம்பிக்கும் இவன் இரவுப்பயணம்
கட்சிக்காக ஒட்டினாலும் கட்சியில் ஒட்டுவதில்லை
கவர்ச்சியான பெண்களையும் சரி
அதற்கான கண்டனமும் சரி
சமமாய்த்தான் தடவப்படும்
நாளை புதுப்படம்,
பிய்க்கப்படும் என்றே
கல்விக்கான காகிதத்தை ஒட்டுவான்
மிரட்டும் சுவர்களிடம் கெஞ்சுவான்
அதிகமாய் காகிதம் இருக்கிறதென்று..
சராசரி மனிதனோடு
ஒட்டாத வாழ்க்கையை ஒட்டி இருக்கும்
இவன் வாழ்க்கையில்
பசையோடு சேர்ந்து ஒட்டி இருக்கும்
அவன் வயிறும் கூட.......

எங்கேயோ சென்று கொண்டிருந்த
மழை மேகத்தை கையசைத்து
அழைத்துக் கொண்டிருந்தது
நாளை அழியப்போகும்
இந்த நகரத்தின்
இறுதி மரம்.....

"மனம்"

சிறப்பு தரிசனம்
கடவுளிடம் கைகுலுக்கும் தூரம்
முகம் முழுதாய் தெரிந்தாலும்
மனம் முழுதும் கவலைகளுக்கான
உருவமே நிரம்பியிருக்க
கடைக்கோடியில் உள்ளவனின் கண்கள் மட்டும்
காணாத ஏக்கத்தில்
கடவுளை மட்டுமே நினைத்திருக்க...
கர்ப்பக்கிரகத்தில் இருந்தபோதும்
மணி (&money) சத்தங்களை மட்டுமே
எண்ணிக்கொண்டிருக்கிறான்
கடவுள் மட்டும்...இன்று இரவு
களவாடப்படப்போவது தெரியாமல்..

அதே போல்தான் இப்போதும் அமர்ந்திருக்கிறாய்
தலை குனிந்து மவுனமாய்,
விரலினால் மணலை கிழித்துக்கொண்டு..
நீ அப்போதும் குழப்பத்தில்தானிருந்திருக்கிறாய்
இப்போதும்.........
என் உணர்வுகள்தான் மாறிக்கிடக்கிறது.
மவுனங்களை தப்பாகப்
புரிந்து கொண்டதன் விளைவு
காதலுக்கு "முற்றும்" தருவாயில்
உன் மவுனம் புரிகிறது
காதலை முடிக்கையிலாவது
வார்த்தை பேசு...
இருக்கும் வரை சரி
நீ சென்ற பிறகு வரும்
மவுனத்தின் மோதல்களை தாங்க இயலாது
ஒன்றை மட்டும் புரிந்து கொள்
நீ இறுதியில் பறித்தது காதலலை மட்டுமல்ல
என் காதலன் எனும் தகுதியையும்தான்......