கடவுளை நம்பாதவன்
கால்கள் தாண்டின
கழட்டி வீசப்பட்ட
திருஷ்டி பழத்தை....
இந்நேரம் எந்திரக் குருவியின் குரலில் எழுந்திருந்திருப்பாளோ..?
இந்நேரம் அவள் அழகுச்சோம்பலை ஆதவன் கண்டிருப்பானோ..?
இந்நேரம் அழகற்ற உடையை அணிந்து அழகாக்கியிருப்பாளோ..?
இந்நேரம் பேருந்தில் ஏறி எட்டாத கம்பியை எட்டிப்பிடித்துக் கொண்டிருப்பாளோ..?
இந்நேரம் என் கவிதையை படித்து கனவில் மிதந்து கொண்டிருப்பாளோ..?
இந்நேரம் கனவைத் திறந்து கல்லூரி விட்டு வந்திருப்பாளோ..?
அய்யய்யோ..! மழை வருகிறதே
குடை பிடித்து வீடு போய்ச் சேர்ந்திருப்பாளோ..?
இல்லை மழையில் நனைவதை வெறுக்கும்
மனிதர்களோடு நின்றிருப்பாளோ..?
கவிதைகள் நிறைத்ததனால், எப்போதும் பயப்படும் நாய்க்கு
இரவு உணவை இலவசமாக தந்திருப்பாளோ..?
விக்கல் வருகிறதே...! நினைத்திருப்பாளோ..?
புரையேறுகிறதே..! திட்டியிருப்பாளோ..?
தூக்கம் வரவில்லையே...! எனைப்போலவே
விட்டத்தை நோக்கி வெறித்துக் கொண்டிருப்பாளோ...?
கனவினில் முத்தமிட்டாளே..!
இதை அவள் தெரிந்திருப்பாளோ..?
ஏய் மனதே..
இதைப் போல இனி எண்ண வேண்டாமாம்...
அவளிடத்தில் இருந்த என் 'காதல்' இப்போது
இல்லாமற் போனதாம்...!