ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Monday, October 30, 2006

கடத்திய போதும்
கவலைப் படவில்லை
"மின்சாரம்"

ஆசிரியர் திட்டிய
மண்டையில் களிமண்ணும்
வறண்டதாய்
'விவசாயி மகன்'

அலுவலகத்தின் அன்றைய தினத்தின்
அவசர வேலையில் காதலன்
கணக்கு வகுப்பில்
கடிஜோக் சொல்லிக் கொண்டிருக்கும் காதலி
இவர்களின் சாயந்திர நேர சந்திப்புக்காய்
நினைவுக்கு வர பார்க்கில்
பழியாய் காத்துக் கிடக்கிறது காதல்


என்னைப் பற்றிய விவரங்களை
பதிவு செய்தும் பயனில்லை
அரசிடத்திலும், அவளிடத்திலும்...

*என் இரவுக்காதலின் இலக்கணம்*

அன்பான என் இதயச்சிறையில்
இருந்து எவனோ ஒருவன் அழைப்புக்காய்
என்னிடம் சொல்லாமலே மாற்றலானாய்
உன் (ஏ)மாற்றத்தால்
என் காதல் அறையின் கதவுகள் கழண்டு விழ
கதவில்லா அறையில்
உன் காசுள்ளவரை காதல் போல
என்னிலும் நடக்கிறது
யார் யாரோ வந்து போகும் காதல்
இரண்டு பையிலும் பணம் நிறைந்திருக்கும்
இரவுகளில் மட்டும்...

என் இதயத்துடிப்பை மீறி
காலத்தைக் குறைக்கிறது
உன் இமைத்துடிப்புகள்...


முடிவில்லாதது
கம்பி எண்ணுதல்
கூண்டுக் கிளிக்கு...

இந்தக் கண்களிரண்டும்
இளைஞிகளைக் கண்டவுடன்
யாஹூ என்றே மெயில் அனுப்புகிறது
இதயத்துக்கு....
பெரும்பாலும் வைரஸ்களுடன்....

குறுக்குவழி:

எரிந்து விழுந்த சாம்பலில்
உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை ஒன்று
அண்டமும் உருண்டைதான் என்று
யாரோ சொன்னதைக்கேட்டு
எதிர்ப்பதமாய் பறந்தது
சூரியனின் முதுகு சுடாதென்று...

*தவறிய ஒன்று*

அம்மா எங்கிருக்கிறாய்
என்னை பொறுத்துக் கொண்டதற்காய்
ண்டிப்பாய் சொர்க்கத்தில்தானிருப்பாய்...
மனது உன்னை மறக்க ஆரம்பித்து விட்டதம்மா...
உன் அன்பு கூட ஓரளவு கிடைக்கிறதம்மா...
ஆனால் இறந்து கொண்டிருக்கும் என் நாக்குதான்
உன் சாம்பார் ருசிக்காக ஏங்கிக் கிடக்கிறது...

கடைசிப்பரீட்சை
எழுதுவதை மிச்சப்படுத்தினேன்
எல்லோர் சட்டையிலும்
மைதெளிக்க வேண்டுமே
என்றெண்ணி.....


தந்தையின் இடத்தில் குடும்ப பாரம்
தாயின் உடல்நிலை பாரம்
தங்கையின் தாவணி பாரம்
தம்பியின் படிப்பு பாரம்

பாரங்களையே பாதங்களாக்கி திரியும் என்னிடம்
அத்தனை பாரங்களையும் தள்ளிவிட்டு
அதிவேகமாய் வருகிறது
காதல் அ'பாரமாய்'.......


மூவரும் ஒன்றாய்த்தான் இருப்போம்
ஒவ்வொருத்தியின் ஆசைகளையும் துறந்து
ஒரே விதமாய் ஆசைப்பட்டோம்
மூவருமே கலெக்டர்
மூவருமே டாக்டர்
மூவருமே இன்சினீயர்
இதைப்போலவே எதிலுமே
இன்று ஒருத்தி விதவையாக
ஒருத்தி இரண்டாம் தாரமாக
ஒருத்தி முதிர்கன்னியாக
கனவுகள் கலைந்தபோதும்
கண்மூடி அழும்போதும்
கவலை தோய்ந்த முகங்களோடு
இப்போதும் ஒன்றாய்த்தானிருக்கிறோம்...

கருத்தறியும் கூட்டத்தில்...
காதல்தான் பெரியது
காதலிப்பதாய் நடிப்பவன் கூற்று
அன்னை அன்புதான் பெரியது
தாயில்லாதவன் கூற்று
தூக்கம்தான் பெரியது
உறக்கமில்லாதவன் கூற்று
பூதம்தான் பெரியது
புன்னகைக்கும் குழந்தைகள் கூற்று
பணம்தான் பெரியது
வெறுமையோடு வாழ்பவன் கூற்று
புத்திதான் பெரியது
பக்தியில்லாதவன் கூற்று
உணவுதான் பெரியது
பசித்தவன் கூற்று
கூற்றுக்கள் பொய்யென்றேன்
மாற்று கருத்து...?
மனித மனத்தின் கொடிய குணமே
பெரியது என்றேன்...
கூற்றுகள் கலைந்தன, தோற்றதாய்.......