ம்ம்.. ஏறிக்கொள்ளுங்கள் புரவி மீது....

Friday, December 01, 2006

காதல் முற்றுப் பெற்றதாய்
முற்றுப் புள்ளியில் கவிதையை முடித்தேன்
கவிதை முடியா வண்ணம்
வரி ஒன்று நினைவில் வர
கமா வில் ஆரம்பித்தது இரண்டாவது பத்தி
கவிதை மட்டுமல்ல
இப்போது காதல்களும் கூட
கமாக்களில்தான் சேர்ந்து கொண்டிருக்கிறது
வாழ்க்கையில்.....

பழைய புத்தகங்களிடையே
மறைவில் சிநேகங் கொண்ட
என்றோ வாங்கிய இந்தப் புதிய புத்தகம்
படிக்கப்படாமலேயே பழையதானது....

என் அழகற்ற உடலை விட்டு
உருவற்ற உயிர் போகும் சமயம்
கனவு கண்டது உயிர்
புதிதாய் பிறந்த பின்
நிலாவிலே வடாம் காயப்போடுவேனா?
காந்தியின் தண்டியாத்திரையில் கலந்திருப்பேனா?
வானளாவிய மிருகங்களின் வாலைப்பிடித்து விளையாடிக் கொண்டிருப்பேனா?
பொன்னியின் செல்வனின் புரவியாய் போயிருப்பேனா?
ஏசுவை சாட்டையால் அடித்துக் கொண்டிருப்பேனா?
எத்தனை முறை இறந்தோம் என்பதை மறந்த உயிர்
தன்னை மறந்து இறைவனிடம் வேண்டியது
கடமைகளைக் கழுவிலேற்றும்
இந்த காதலை மட்டும் என்னுள் கலக்காதிரு....

*இப்போதும் கூட....*

கழட்டி விடப்பட்ட காதல் விலங்கிலிருந்து
விழித்தெழுந்த என் தூக்கத்தில்
முத்தங்களின் சவுக்கடிகளும்
தொட்டதின் ரணங்களும்
பரிசுகளின் அவமானங்களும்
சிந்தனைகளின் கொலைகளும்
கவிதைகளின் கொடூரங்களும்
....வந்து சேர்கின்றன
இந்த நெடிய இரவில்
வந்து வந்து போகும்
பகல்களைப் போல.....

திருக்குறளின் இரண்டு அடியாய்
ணைந்திருப்போம் என்றாய்
இன்றோ எதுகையும் மோனையும் ஒட்டாமல்.....


அவளுக்கு
ரோஜாதான் அழகு
பத்து ரூபாயாம் மல்லிகை...

பசுமை நிறைந்த மலை உச்சியில் இருந்து
வெண்மை நிற மேகத்தில்
வானம் எட்டும் தூரம்தான்
என்று எழுத நினைக்கிறேன்
காதல் காற்று கலைத்து கலைத்து விளையாடுகிறது...

*இறந்து பிறந்த குழந்தைக்காக,*

பொங்கி வரும்

பால் குடிக்கும் முன்னரே, மண்
தங்கி வரும்
பால் குடிக்க காத்திருக்கிறாயோ
என் செல்லமே......


யமனுக்கு கொஞ்சம் கூட அறிவில்லை
எருமை மீது சரியாக உட்காருமா குழந்தை
தவறி விழ வேண்டும் என
கையேந்தி காத்திருக்கிறேன்
பூமியில் புதைத்த இடத்தில் இருந்துகொண்டு.....